search icon
என் மலர்tooltip icon
    • ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது.
    • சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

    பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது. அப்போது வாகனங்கள் அனைத்தும் சாலையையொட்டி நிற்கும் நிலையில் சக்கர நாற்காலியில் முதியோரை தள்ளிக் கொண்டு செல்லும் சிறுமி ஒவ்வொரு 3 அடிகளிலும் போக்குவரத்து சிக்னலில் வாகனங்களில் காத்து நிற்கும் கார் டிரைவர்கள் முன்பு பணிந்து நின்று அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சிகள் உள்ளது.

    சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் சிறுமியின் செயலை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிட்னி:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என் ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல்லில் அதிரடி காட்டி வரும் மெக்கர்க் ஆகியோருக்கு இடமில்லை.

    ஆஸ்திரேலியா அணி விவரம்:

    ஆஷ்டன் ஆகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லீஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

    • நேற்று மாலை 6 மணி அளவில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார்.
    • கோல்ப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த அவரை அந்த பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் பார்த்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்குச் சென்றார்.

    கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளார். நேற்று மாலை 6 மணி அளவில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்குள்ள பசுமை புல்வெளியில் சிறிதுதூரம் நடந்து சென்ற அவர் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

    கோல்ப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த அவரை அந்த பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் பார்த்தனர். அவருக்கு வாழ்த்தும், வணக்கமும் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

    முதலமைச்சருடன் 'செல்பி'யும், புகைப்படமும் எடுத்துக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு திரும்பினார்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது மகள் செந்தாமரை மற்றும் பேரன், பேத்திகளுடன் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


    • இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கடந்தவாரம் தான், ‘வாட்ஸ்-அப்’ மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார்.

    புதுடெல்லி:

    நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.

    மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் சுப்ரீம் கோர்ட்டு மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், சுப்ரீம் கோர்ட்டில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மிக முக்கியமாக கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். அதோடு பழைய வழக்கு விசாரணைகளையும் பார்வையிடுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்களை மக்கள் எளிதான தேடல்கள் மூலம் பெறுவதற்கும் இந்த இணையதளம் உதவி செய்கிறது.

    கடந்தவாரம் தான், 'வாட்ஸ்-அப்' மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார். அதாவது வழக்கினை தாக்கல் செய்யும் பொதுமக்கள் மற்றும் வக்கீலுக்கு வழக்கின் விவரம், விசாரணைக்கு வரும் தேதி மற்றும் தீர்ப்பு விவரம் ஆகியவை வாட்ஸ்-அப் எண் 87676- 87676 மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த சூழ்நிலையில் இந்த புதிய இணையதளமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருவது மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.

    • வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
    • ஆனால் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் டிரம்ப் விமர்சித்து வந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்புக்கு மக்களிடையே ஆதரவு பெருகி காணப்படுகிறது.

    தொழிலதிபரான டிரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்துவருகிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

    இந்நிலையில், கோர்ட்டை அவமதித்ததாகக் கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9,000 டாலர் (சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கோர்ட்டு உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

    • சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதின.
    • இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று காலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் கோவை, சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் வணிக சிலிண்டர் 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த மாதமும் வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.

    சென்னை:

    எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை வரை 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. சென்னையில் 1911 ரூபாய் விற்பனை செய்யப்படும் நிலையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.

    கடந்த மாதமும் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
    • ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மார்கஸ் ஸ்டாயினிஸ் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

    எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு அர்ஷின் குல்கர்னி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல். ராகுல் 22 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்மிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், துஷாரா, கோட்சி, முகமது நபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • சிரிப்பால் பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜெய். திருமணம் பற்றிய கேள்விகளுக்கு தனது சிரிப்பாலேயே பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில், ஜெய் மற்றும் நடிகை பிரக்யா நாக்ரா திருமணம் செய்து கொண்டதை உணர்த்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    வைரலாகி வரும் புகைப்படத்தில் பிரக்யா கழுத்தில் தாலி அணிந்துள்ளார். இவருடன் நடிகர் ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். இதே புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை பிரக்யா "கடவுள் ஆசியுடன் புதிய வாழ்க்கை தொடங்கியது," என குறிப்பிட்டுள்ளார்.

    இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெய் திருமணம் செய்து கொண்டாரா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சிலர் இந்த புகைப்படத்தின் பின்னணியில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை உற்று நோக்கி இது புதிய படத்திற்கான புரமோஷனாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×